அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
பிறிதொருவர் துன்பத்தைத் தன் துன்பம் போல கொள்ளாதவன் மிகப்பெரிய அறிவாளியானாலும் அவனால் உலகிற்கு ஆகப்போகும் பயன் தான் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் வள்ளுவப் பெருந்தகை.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அன்பும் இரக்கமும் கொண்டவரே ஆத்ம சாந்தி அடைவார்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
உண்மையான ஆன்மா எப்போதும் பிற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல பாவித்து விடும். ஒரு காலத்தில் நம் மக்கள் அறிவை விட உணர்ச்சியாலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் தனது பருவத்திற்குத் தகுந்த உணர்வை முழுமையாக ஏற்று வாழ்ந்து வந்தனர்.
பல குழந்தைகளின் தாயானவள் வேறு பிள்ளைகளின் துன்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் பிள்ளையின் துன்பமாகவே கருதி அந்த பிள்ளைக்கு உதவுவாள். எங்கேனும் யாரேனும் துன்புற்றால் கூட யார் பெற்ற பிள்ளையோ இப்படி கஷ்டப்படுகிறதே என்று இன்னொரு தாயின் மனதை தங்கள் மனதால் வெளிப்படுத்தும் களங்கமற்ற மக்களைக் கொண்டதே நமது பூமி.
இதன் சிறப்பும் பாரம்பரியமும் இந்நாட்டு கலாச்சாரக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் இருக்கிறது. ஆன்மீகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.
அப்படிப்பட்ட தியாகத்தை இந்துக்களின் புராணங்களும் இதிகாசங்களும் எல்லா இடங்களிலும் கற்றுக் கொடுத்து நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.
மகாபாரத புராணத்தில் இப்படி ஒரு கருணை மிக்க நாள் ஒன்றைப் பற்றி நாம் பார்ப்போம். மகாபாரத புராணம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சண்டைச் சச்சரவுகளைக் கொண்ட கதையாகத் தோன்றினாலும், அந்த அற்புத இதிகாசத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தை வலியுறுத்தும் போதனைகளாகத்தான் காட்சி தருகின்றன.
இந்த இதிகாசத்தில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரரும், தனது அந்திமக் காலத்தின் கடைசி நிமிடத்தில் கூட ஒரு பிராணியின் துன்பத்தைத் தன் துன்பம் போல கருதி அதற்கு பின்னரே சொர்கம் சென்றார் என்ற அழகான நிகழ்வு சொல்லப்படுகிறது. அந்த அழகான கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
தங்கள் வாழும் காலம் முடிந்ததையரிந்து சொர்கலோகத்திற்கு பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் இமாலயத்தின் உச்சத்தில் கால்நடையாக நடந்து சென்றுகொண்டே இருந்தார்கள். செல்லும் வழியில் முதலில் திரௌபதி விழுந்தாள். சிறிது தூரம் சென்றவுடன் நகுல சகாதேவர்கள் ப்ராணன் பிரிந்து விழுந்தார்கள். பிறகு அர்ஜுனன், அதன் பின் பீமன் என்று ஒவ்வொருவராக விழுந்தார்கள்.
இப்போது தர்மபுத்திரர் மட்டும் தான் மிச்சம். அவர் கூடவே ஒரு நாய் ஒன்று பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இப்போது தர்மர் சொர்காரோகனம் என்றழைக்கப்படும் சொர்க்கத்தின் பாதையை அடைந்து விட்டார். இனி சொர்கத்திற்கு ஏற வேண்டியது தான் பாக்கி. அப்போது கூடவே வந்து கொண்டிருந்த நாய் கேட்டது. "தர்மராஜரே! எனது உடம்பின் மீது நிறைய கிருமிகள் படர்ந்துவிட்டது. அவைகளால் நான் மிகவும் துயரத்தில் இருக்கிறேன். அந்த கிருமிகளிடமிருந்து எனக்கு விடுதலையைக் கொடுத்து விட்டு நீ சொர்கத்திற்கு போயேன்!" என்றது.
தர்மரும் சரி என்று கூறி "கிருமிகளைத் தட்டி உதறிவிட்டுவிடலாம். அவைகள் உன் உடலிலிருந்து சிதறி கீழே விழுந்து விட்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய்" என்று கூறி நாயின் உடலைத் தட்ட முற்பட்டார்.
அப்போது கிருமிகள் எல்லாம் பதறிப்போய் பேசலாயின "தர்மபுத்திரரே! கிருமிகளாகிய நாங்கள் இந்த நாயினிடத்தில் இருப்பதை உண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே வேறு உணவு கிடைக்காது. நீங்கள் நாயை உதறி எங்களை கீழே தள்ளிவிட்டுவிட்டால் எங்கள் எல்லோருடைய
ஜீவனும் போய்விடுமே! அதனால் சற்று கருணைகாட்டுங்கள். அப்படிச் செய்து விடாதீர்கள்" என்று கிருமிகள் கூறின.
இதனைக் கேட்ட தருமபுத்திரரின் மனம் மிகவும் வருந்தியது. நாயின் கோரிக்கையை நிறைவேற்றாமல் சொர்கம் செல்ல முடியாது. நாயைக் காப்பாற்றும் பொருட்டு கிருமிகளைக் கொன்றுவிட்டாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. நாயையும் காப்பாற்ற வேண்டும். கிருமிகளையும் காப்பாற்ற வேண்டும். நானும் சொர்கத்திற்கு போக வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார் தர்மபுத்திரர்.
என்ன செய்தார் தெரியுமா? நாயின் மீதிருந்த கிருமிகளை எல்லாம் தன் உடல் மீது போட்டுக் கொண்டார். இப்போது கிருமிகளும் பிழைத்தன. நாய்க்கும் நன்மை பிறந்தது. கிருமிகளின் துன்பத்தையும் தன் துன்பமாக நினைத்து தன்னையே தியாகம் செய்தார் தருமர்.
இவ்வாறு பிறரின் துன்பத்தை தன் துன்பமாகவே கருதிய தர்மருக்கு இந்திரனும், எமதர்மராஜனும் காட்சிதந்து அவரை அன்போடு சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த அவசர யுக வாழ்க்கையில் பெற்ற தாய் தந்தையரின் துன்பத்தைக் கூட தனது துன்பமாக ஏற்று கருணையோடு காக்கும் குணம் இயந்திரமயமான மனிதர்களிடம் இருப்பதில்லை என்று பரவலாக அறியப்படுகிறது. ஆனாலும் நமக்குள்ளே இருக்கும் குறைந்தபட்ச இரக்க உணர்வை வெளிப்படுத்துவோம். அனைவரிடத்தும் அன்பும் கருணையும் காட்டியே வாழ முயல்வோம். அதுவே நமது கடமையென நமது புராணங்களும், இதிகாசங்களும், ஆன்மீகமும் நமக்கு போதிக்கின்றன. அதையே பின்பற்றி வாழ்ந்து நாமும் அமைதி என்ற சொர்கத்தை எய்துவோமாக.